முதன்மைச் சந்தையில் பங்குகளை வாங்கியவர்கள், தம் பங்குகளை விற்கவோ, மற்றவர்கள்
வாங்கவோ அணுகுவது இரண்டாம் நிலைப் பங்குச் சந்தை அல்லது வெளிச்சந்தை ஆகும். பங்குச்
சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை(Listed shares) மட்டுமே வாங்கவோ விற்கவோ இயலும்.
அதாவது, பங்குகளை வெளியிட்ட நிறுவனங்கள், விதிமுறைப்படி பங்குச் சந்தையில் தங்கள்
பங்குகளைப் பதிவு செய்து, பட்டியலில் சேர்க்கச் செய்ய வேண்டும். பின்பே
அப்பங்குகளின் பரிவர்த்தனை நடைபெறும். பங்குகளின் விலை, நிறுவனத்தின் தரத்திற்கும்,
சந்தையின் பல்வேறு காரணிகளைப் பொறுத்தும், சந்தையில் அப்பங்குகளுக்கான தேவையைப்
(Demand) பொறுத்தும் மாறிக்கொண்டே இருக்கும் (volatile). பரிவர்த்தனை செய்ய
விரும்புபவர், சந்தை நிலவரத்திற்கேற்ற விலையைக் கொடுத்து பங்குகளை வாங்கவோ, அல்லது
விலையைப் பெற்றுக்கொண்டு விற்கவோ செய்வார்.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர் அந்நிறுவனத்தின் பங்குதாரர்
எனப்படுவார். பங்குதாரருக்கு, நிறுவனத்தின் லாபத்தைப் பொறுத்து ஈவுத்தொகை/பங்காதாயம்
(Dividend) கிடைக்கும். தேவையான பொழுது, தரகர்கள் மூலமாக, பங்குகளை விற்றுப்
பணமாக்கிக் கொள்ளவும் செய்யலாம்.