ஒரே ஒருவர், தனது கைப்பணத்தை (அல்லது தான் கடன் வாங்கிய பணத்தைப்) போட்டு ஒரு
நிறுவனத்தைத் துவங்கி, நடத்திவருகிறார் என்று கொள்வோம், அந்நிறுவனத்தின் லாபமோ
நட்டமோ அவரை மட்டுமே சேர்ந்தது. அந்நிறுவனத்தின் முழுப்பொறுப்பும் அவரையே சாரும்.
இத்தகைய நிறுவனத்தை ' தனி நபர் நிறுவனம் ' (proprietorship concern) என்று அழைப்போம்.
அந்நிறுவனதாரர் 'உரிமையாளர்' (proprietor) என்று அழைக்கப்படுவார்.
கூட்டு நிறுவனம் (Partnership company) :
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டுச் சேர்ந்து நடத்தும் ஸ்தாபனம், கூட்டு
நிறுவனமாகும் (Partnership company). இதன் உரிமைதாரர்கள் கூட்டாளிகள்(partners)
எனப்படுவர். லாபம், நட்டம் எதுவாயினும், சமமாகக் கூட்டாளிகளுக்குள் பிரித்துக்கொள்ள
வேண்டும். நிறுவன நடவடிக்கைகளுக்கு, அனைவரும் பொறுப்பாவார்கள். நிறுவனத்தின் வணிக
நடவடிக்கைகளால், ஏதேனும் கடன் ஏற்பட்டாலோ, நிறுவனம் திவாலானாலோ, கூட்டாளிகளின்
தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்தைக்கூட பறிமுதல் செய்ய, கடன் கொடுத்தவருக்கு
உரிமை உண்டு.